நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள ஜெயிலர் திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அதுபற்றிய பரபரப்பான விபரம் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகை தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜெயிலர் திரைப்படம் வசூலையும் குவிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஜெயிலர் திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை வக்கீல் எம்எல் ரவி தாக்கல் செய்துள்ளார். மனுவில் படத்துக்கு தடை விதிப்பதற்கான காரணங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் ஜெயிலர் திரைப்படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வக்கீல் ரவி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஜெயிலர் திரைப்படத்தை பார்த்தேன். மிக மோசமான, படு பயங்கரமான வன்முறை காட்சிகள் பல இடங்களில் உள்ளன.
திரைப்படத்துக்கு தணிக்கை குழு ‘யுஏ’ சான்றிழ் வழங்கி உள்ளது. இதனால் இளைஞர்கள், குழந்தைகள் இந்த திரைப்படத்தை பார்க்கலாம். ஆனால், படுபயங்கரமான வன்முறை காட்சிகள் உள்ளன. பெரிய சுத்தியலை கொண்டு ஒருவரின் தலையை அடித்து சிதைப்பது, பெரிய வாளை வைத்து ஒருவரது தலையை ரஜினிகாந்த் துண்டிப்பது போன்ற வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே தமிழ்நாட்டில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பற்களை அகற்றிய குற்றச்சாட்டில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் சிக்கினார். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அப்படியான சூழலில் படத்தில் திகார் சிறையில் ரஜினிகாந்த் ஜெயிலராக இருக்கும்போது தண்டனை கைதியின் காதை துண்டிப்பது போன்ற காட்சி உள்ளது. சினிமா என்பது மக்களை மிக எளிதில் கவர்ந்து விடும்.
அப்படி இருக்கும்போது, இந்த படத்தை பார்க்கும் இளைஞர்கள், குழந்தைகளின் மனதில் வன்முறை எண்ணம் தான் உண்டாகும். எனவே, ஜெயிலர் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். இந்த படத்துக்கு வழங்கப்பட்ட யுஏ தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.