நிறைவேறாமல் போன விஜயகாந்தின் ஆசை… வைரலாகும் புகைப்படம் விஜயகாந்த் வாழ்வில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தார். நடிகராகவும், நடிகர் சங்க தலைவராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார்.
அப்படி ஒரு பிரச்சனை தான் கள்ளழகர் திருமண மண்டபம் இடிப்பு. கோயம்பேடு நூறடி சாலையில் 1 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது இந்த கல்யாண மண்டபம்.
மண்டபம் இருந்த இடம் கோயம்பேடு மேம்பாலம் கட்டத் தேவைப்படுவதாக கூறி மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விஜயகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பினர். வழக்கில் போராடிய போதும், தோல்வியை சந்தித்தார் விஜயகாந்த்.
மொத்தம் இருந்த 1 ஏக்கர் நிலத்தில் 56 சென்ட் வரை மட்டுமே இடிக்கப்பட்ட நிலையில், மீதம் இருந்த 3 கிரவுண்ட் நிலம் விஜயகாந்திற்கு கொடுக்கப்பட்டது. அந்த மீதம் கிடைத்த இடத்தில்தான் தற்போதைய தேமுதிக தலைமை அலுவலகம் கட்டப்பட்டது.
இவரின் அடுத்த கனவு தான் லட்சிய வீடு. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அட்கோ நகர் பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் கடந்த 2013ம் ஆண்டு முதல் விஜயகாந்த் வீடு ஒன்றை கட்டி வருகிறார்.
இந்த வீட்டின் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடக்காமல் இருந்த நிலையில் தற்போது தான் மீண்டும் வேலைகள் தொடங்கியிருக்கிறது.
90% வேலைகள் முடிவடைந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த வீட்டில் பால் காய்ச்சப்பட்டதாகவும் இவ்விழாவில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
10 ஆண்டுகளாக கட்டப்பட்ட இந்த வீட்டில் குடியேறாமலேயே விஜயகாந்த் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்ற சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. விஜயகாந்தின் கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.